பொது, திறந்த, ஒருங்கிணைந்த, இணையத் தமிழ் நூற்பட்டியல் செயற்திட்டம் - noolahamfoundation/project-proposals GitHub Wiki

பொது, திறந்த, ஒருங்கிணைந்த, இணையத்தமிழ் நூற்பட்டியல் செயற்திட்டம்
(Common, Open, Online, Integrated Tamil Catalog Project)

ஆவண நோக்கம்: செயற்திட்ட வரைவிலக்கணம் (Project Definition/Charter)

ஆவண வரலாறு: வரைவு 1.0 - ஒக்ரோபர் 20, 2013

Table of Contents

பொருளடக்கம்

  1. பின்புலம் - Background/Intro
  2. சிக்கல்களும் வாய்ப்புக்களும் - Problems and Opportunities
  3. இலக்குகள் - Goals and Objectives
  4. செயற்பரப்பு - Scope
  5. முக்கிய பங்குத்தாரர்கள் - Key Stakeholders
  6. வெற்றி அளவீடுகள் - Outcomes/Success Criteria
  7. தற்கோள்களும் கட்டுப்பாடுகளும் - Assumptions and Constraints
  8. இடர்கள் - Risks
  9. மதிப்பீட்டுச் செலவுகளும் வளங்களும் - Estimated Costs and Resources
  10. மதிப்பீட்டு காலம் - Estimated Duration
  11. உசாத்துணைகள் - References
  12. கலைச்சொற்கள் - Technical Terms

1. பின்புலம் - Background/Intro

1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட போது 97 000 மேற்பட்ட படைப்புகள் அழிந்தன. இதில் அரிய, மீட்டெடுக்க முடியாத, பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட தமிழ் சுவடிகள், நூல்கள், ஆவணங்களும் அடங்கும். ஆனால் இந்த அழிந்த படைப்புகள் எவை என்ற குறிப்பான விபரங்கள் எம்மிடம் இல்லை. யாழ் நூலகம் அதன் சேகரிப்புகள் தொடர்பான முழுமையான நூல்பட்டியல் எதையும் பொதுவில் வெளியிடவில்லை என்பதால் நாம் எதை இழந்தோம் என்பதைக் கூட எம்மால் முழுமையாக அறியமுடியவில்லை, உணரமுடியவில்லை.

நூல்பட்டியல் (library catalog) அல்லது விபரப்பட்டியல் (catalog) என்பது ஒரு நூலகத்தில் உள்ள அல்லது ஒரு நாட்டில் வெளிவரும் நூற்கள் மற்றும் பிற தகவல் வளங்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு ஆகும். ஒரு வளத்தைப் பற்றி ஆவணப்படுத்த, பாதுகாக்க, அதைப் பயனர்களுக்கு எடுத்துச் செல்ல விபரப்பட்டியல்கள் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. தமிழ் அறிவு வளங்களை இலகுவாகக் கண்டடையக் கூடியதாக இருந்தால் அவை கல்வி, ஆய்வு, மொழி-பண்பாட்டுப் பேணல், பொழுதுபோக்கு உட்பட்ட பல பயன்பாடுகளுக்கு கூடுதலாகப் பயன்படும். இது தமிழ்ப் படைப்புகளின் சூழமைவை (ecosystem), சந்தையை (demand) ஊக்குவிக்கும். விபரப்பட்டியல்கள் அறிவு வளங்களுக்கான திறவுகோல்கள் போன்றவை. ஆனால் தமிழ் நூல்கள், வளங்களைப் பற்றிய தகவல்கள் முழுமையாக தொகுக்கப்படாத, பகிரப்படாத நிலையே இன்றுவரை உள்ளது.

2. சிக்கல்களும் வாய்ப்புக்களும் - Problems and Opportunities

பொதுவாக நூற்பட்டியலை வெளியிடுவது, ஆவணப்படுத்துவது அரசுகளின் ஒரு முக்கிய கடமை ஆகும். ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, உருசியா, செருமனி போன்ற நாடுகள் பெரும் வளங்களை ஒதுக்கி இந்தப் பணிகளைச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக பல மேற்குநாடுகளில் இயங்கும் பதிப்பகங்கள் எல்லாம் காங்கிரசு நூலகத்துக்கு (Library of Congress) அல்லது தமது தேசிய ஆவணகங்களுக்கு நூல்களையும் நூல்களைப் பற்றிய தகவல்களையும் கட்டாயம் அனுப்ப வேண்டும். இத் தகவல்களை நூலகக் கூட்டமைப்புக்கள் தொகுத்துப் பகிர்கின்றன. குறிப்பாக Online Computer Library Center, Inc (OCLC - worldcat.org) கூட்டமைப்பே உலகின் அதிக நூலடைவுகளைக் (Bibliography) கொண்ட இலாப நோக்கமற்ற கூட்டமைப்பு ஆகும்.

ஆனால் தமிழ்ச் சூழலில் அரசுகள் இந்தப் பணிகளை முறையாகச் செய்யவில்லை. இந்திய அளவில் ஆவணகவியலும் நூலகவியலும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட திணைக்களங்கள் ஆகும். தமிழ்நாடு அரசும் இத் துறையைக் கவனிக்க வில்லை. எடுத்துக்காட்டாக பல ஆண்டுகளாக தமிழ் நூற்பட்டியல்கள் வெளியிடப்படவில்லை. இலங்கையில் பல கால கட்டங்களில் அரசுகள் திட்டமிட்ட முறையில் தமிழ் தகவல் வளங்களை அழித்து வந்துள்ளது. ஈழத்தில் உருவாக்கப்பட்ட பெளதீக ஆவணகங்களும் போரில் அழிந்துவிட்டன. செல்வராஜாவின் நூல் தோட்டம் போன்ற சில தனிப்பட்ட முயற்சிகள் விதிவிலக்காக தமிழ் நூற்பட்டியல் (catalog) இன்னும் தொகுக்கப்படவில்லை. இந்தச் சூழலில்தான் ஒரு பொது, திறந்த, ஒருங்கிணைந்த, இணைய தமிழ் நூற்பட்டியலை தன்னார்வ அமைப்புக்களும், அரசு சாரா அமைப்புக்களும் சேர்ந்து உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இணையக் கட்டமைப்புக்கள் இதற்கான ஒரு பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளன.

தமிழ்நூற் பட்டியலாக்கத்தில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் தனித்தனியே தகவல்களைத் தொகுப்பதால் வளங்கள் வீணாகும். தகவல் முழுமை பெறாது. அவரவர் பயனர்கள் விரிவான சேவையைப் பெற முடியாது. ஆனால் நாம் இணைந்து ஒரு பொது, திறந்த, ஒருங்கிணைந்த இணைய தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்துப் பகிர்ந்தால் அனைவரும் பயன்பெறலாம்.

பல்வேறு இலக்குகள், நிறுவனக் கட்டமைப்புகள், செயற்பாட்டு முறைகள், வளங்கள் கொண்ட அமைப்புகள் ஒரு பொது, திறந்த, இணைய, ஒருங்கிணைந்த தமிழ் நூற்பட்டியல் செயற்திட்டத்தில் இணைந்து செயலாற்றுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. பட்டியலாக்கம் தொடர்பாக எந்தச் சீர்தரத்தைப் பயன்படுத்துவது? தகவல்களை எப்படிப் பகிர்வது? ஒருங்கிணைந்த தகவல்கள் யார் உடைமையாகும்? பல தரப்பட்டவர்களை இணைத்து எவ்வாறு இவ்வாறான ஒரு திட்டத்தை முன்னெடுப்பது போன்ற பல சிக்கல்கள்.

(Describe past efforts here)

இந்த செயற்திட்டம் இத்தகைய சிக்கல்களைக் கருத்தில் எடுத்து பொது இலக்குகள் நோக்கி முன்நோக்கி நகர்வதற்கான வழிமுறைகளைக் கொண்டு இருக்கிறது.

3. இலக்குகள் - Goals and Objectives

  • பொது, திறந்த, இணைய, ஒருங்கிணைந்த தமிழ் நூற்பட்டியலின் தேவையை பட்டியலாக்கம் பணியில் ஈடுபட்டு இருக்கும் அமைப்புகளுக்கு இடையே எடுத்துரைத்து இந்தப் பொது இலக்குகள் தொடர்பாக ஆதரவைத் திரட்டல்.
  • தமிழ் நூல் பட்டியலாக்கத்தில் ஈடுபட்டு இருக்கும் அமைப்புகள் அனைவரும் பகிரவேண்டிய ஓர் அடிப்படை மீதரவுச் சீர்தரத்தை உருவாக்கல்.
  • அடிப்படை மீதரவுகளை அல்லது நூல்பட்டியல்களை பகிர்வதற்கான வழிமுறைகளை கண்டடைதல்.
  • தகவல்களை ஒருங்கிணைத்து அனைவரும் பயன்படுத்தக் கூடிய, தரவிறக்கக் கூடிய ஒரு பொது, திறந்த, ஒருங்கிணைந்த இணையத் தமிழ் நூல்பட்டியல் களஞ்சியத்தை (repository/platform) உருவாக்கல்.
  • தமிழ்நூல் பட்டியலாக்கத்தில் ஈடுபட்டு இருக்கும் அமைப்புகளுக்கு இடையே ஓரு வலைப்பின்னலை உருவாக்கி, மீதரவுகளை மேற்கணட சீர்தரம், பகிர்வு வழிமுறைகளைப் பயன்படுத்திப் பகிர ஊக்குவித்தல்.
  • அச்சுவடிவில் இருக்கும் தமிழ் நூல்பட்டியல்களை மேலே குறிப்பிடப்பட்ட நூல்பட்டியல் களஞ்சியத்தில் எண்ணிமப்படுத்தப்பட்ட உருப்படிகளாக (itemized digital entries) சேர்த்தல்.

4. செயற்பரப்பு - Scope

அனைவரும் பகிர வேண்டிய அடிப்படை மீதரவுச் சீர்தரம்

ஒரு நூலை அல்லது வளத்தை ஆவணப்படுத்த (classify and describe), பயனர்கள் தேட, கண்டுபிடிக்க (search and discover), மேற்கோள்காட்டத் (cite) தேவையான அடிப்படையான எல்லா மீதரவுகளையும் சேகரிப்பது, பகிர்வது முக்கியமானது. இதை நாம் சரிவரச் செய்யவில்லை என்றால் வளங்கள் பயன்படுத்தப்படாமல் எங்கோயோ ஒரு மூலையில் தேங்கி விடும் அபாயம் உள்ளது. அதே வேளை சிக்கலான விரிவான மீதரவுச் சீர்தரங்களைப் பின்பற்ற நிறைய வளங்கள் தேவைப்படும். பல அமைப்புகள் ஏற்கனவே தமக்கான மீதரவுச் சீர்தரங்களைக் கொண்டுள்ளன. ஆகவே, எளிமையான, அனைவரும் பகிர வேண்டிய அடிப்படை மீதரவுக் கூறுகளை(common metadata elements) கொண்ட ஒரு சீர்தரம் ஒன்றை உருவாக்கி அல்லது அடையாளம் கண்டு நாம் ஓர் உடன்பாடு எட்ட வேண்டி உள்ளது. டப்பிளின் கருவம் (Dublin Core) மீதரவுச் சீர்தரம் இவ்வாறான ஓர் எளிய, பரந்து பயன்படுத்தப்படும் அனைத்துலக சீர்தரம் ஆகும்.

டப்பிளின் கருவகம் கீழ்வரும் 15 அடிப்படை மீதரவுக் கூறுகளைக் கொண்டது. இதனைப் பயன்படுத்தி நிகழ்படம், படம், வலைப்பக்கம் போன்ற பல்வேறு இணைய வளங்களையும் நூல், பொருள் போன்ற பெளதீக வளங்களையும் விபரிக்க முடியும். டப்பிளின் கருவம் பல்வேறு அனைத்துலக நிறுவனங்களாலும் மென்பொருட்களாலும் ஆதரிக்கப்படும் சீர்தரம் ஆகும்.

  • பெயர்/தலைப்பு - Title
  • ஆக்கர் - Creator
  • துறை - Subject
  • விபரிப்பு - Description
  • பதிப்பகர் - Publisher
  • பங்களிப்பாளர் - Contributor
  • திகதி - Date
  • வகை - Type
  • வடிவம் - Format
  • இனங்காட்டி - Identifier
  • மூலம் - Source
  • மொழி - Language
  • உறவு - Relation
  • துழாவுகை - Coverage
  • உரிமங்கள் - Rights

பல்வேறு நிறுவனங்கள் தமது மீதரவுகளைப் பகிர்வதற்கான வழிமுறைகள்

ஒரு ஒருங்கிணைந்த நூற்பட்டியலை உருவாக்க தகவல்களைச் சேகரிக்கும் பல நிறுவனங்கள் அத் தகவல்களைப் நுட்ப நோக்கில் பகிர்வதற்கான வழிமுறைகள் தேவை. அதற்கு பின்வரும் வழிகள் பயன்படும்.

  • எளிமையாக மீதரவுகளை எக்சு.எல் கோப்புகளாக(excel files) அல்லது காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட தரவுகளாகப் (csv format) பகிராலாம்.
  • வலைச் சேவைகள் (web services) வசதிகள் கொண்ட மென்பொருட்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தேவையான மீதரவுகளை வலைச் சேவையாக வழங்கலாம். பல மென்பொருட்கள் டப்பிளின் கருவ மீதரவுக் கூறுகளை வலைச் சேவையாக வழங்கும் ஆற்றலைக் கொண்டு இருக்கின்றன. அவ்வாறு இல்லாவிடினும் அதற்கான செயலிகளை எழுதலாம்.
  • தேவைப்படும் போது, நிரல்களை அல்லது தானியங்கிகளை இயக்கி மீதரவுகளை சுரண்டி எடுக்கலாம்.
  • கைவினையாகவும் சில தரவுகளை இட வேண்டி வரலாம்.
நாம் வளங்களப் பற்றிய மீதரவுகளையே பகிர்கிறோம். வளங்களை அல்ல என்பதை நாம் தெளிவாகக் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த, இணைய தமிழ் நூற்பட்டியல் தளம்

எல்லோரும் பகிர்ந்த தரவுகளை ஒருங்கிணைத்துப் பல்வேறு தேவைகளுக்காகப் பகிரக்கூடி ஒர் இணையக் கட்டமைப்புத் தேவை. அதாவது பயனர்கள் நூல்களை பல்வேறு வழிகளில் தேட, அவற்றை எங்கு பெற்றுக் கொள்ளலாம் போன்ற தகவல்களைப் பெற, சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து அந்தப் படைப்புகள் பற்றிய கருத்துக்களைப் பகிர உதவக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த கூட்டமைப்பில் பங்கெடுக்கும் நிறுவனங்கள் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்களை பகுதியாகவோ, முழுமையாகவோ தரவிறக்கி தமது பயனர் வட்டங்களுக்கு ஏற்ற வழியில் வழங்கக்கூடிய வசதி வேண்டும். ஆங்கிலச் சூழலில் Online Computer Library Center, Inc (OCLC) என்ற இலாப நோக்கமற்ற நூலகக் கூட்டமைப்பு இத்தகைச் சேவையை வழங்குகிறது. இதன் worldcat.org என்ற தளத்தில் சுமார் 80 மில்லியனுக்கு மேற்பட்ட படைப்புக்களின் தகவல்களைப் பெறலாம்.

இத்தகைய ஒரு தளத்தை வடிவமைப்பது நுட்ப நோக்கில் சிக்கலான ஒரு விடயம் இல்லை. பல கட்டற்ற மென்பொருட்கள் பல சிறப்புக் கூறுகளுடன் கிடைக்கின்றன. collectiveaccess.org, extensiblecatalog.org, open-ils.org, koha.org, evergreen-ils.org போன்ற மென்பொருட்கள் பட்டியலாக்கம் தொடர்பாக சிறப்பான செயற்கூறுகளை கொண்டவை. dspace.org, islandora.ca, mukurtu.org, contentdm.org, greenstone.org எண்ணிம நூல்களுக்கு ஏற்ற பல செயற்கூறுகளைக் கொண்டவை. இவற்றின் அனேகமானவற்றில் டப்பிளின் கருவகம் உட்பட்ட மீதரவுச் சீர்தரங்களுக்கு ஆதரவு உண்டு.

மேலும் தகவல்களுக்கு பார்க்க

மேலே சுட்டப்பட்ட கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்தி, அல்லது அடிப்படையாக் கொண்டு நாம் எமக்குத் தேவையான பொது, திறந்த,ஒருங்கிணைந்த, இணைய தமிழ் நூற்பட்டியல் தளத்தை உருவாக்கலாம். தேவைப்படின் நாம் எமது தேவைகளுக்குத் தேவையான தனித்துவமான மென்பொருளை வடிவமைப்பும் செய்யலாம்.

5. முக்கிய பங்குத்தாரர்கள் - Key Stakeholders

  • பயனர்கள்
  • தமிழம், நூலகத் திட்டம், மதுரைத் திட்டம், படிப்பகம், தமிழ் விக்கியூடகங்கள், கன்னிமரா நூலகம், ரோசா முத்தையா நூலாகம், விருபா, இணையத் தமிழ் நூற் கடைகள், பதிப்பகங்கள் போன்ற தமிழ் நூல் பட்டியலாக்கம் பணியில் ஈடுபட்டு இருக்கும் அமைப்புகள்.
  • தமிழ்ப் பண்பாட்டு மரபுவள நிறுவனங்கள் (Tamil Cultural Heritage Institutions)
  • தமிழ்நாடு/இலங்கை அரசு நிறுவனங்கள்?
  • நுட்ப அணி
  • ஒருங்கிணைப்பு அணி
  • நிதி திரட்டல்

6. வெற்றி அளவீடுகள் - Outcomes/Success Criteria

  • தமிழ் நூல்பட்டியல், பட்டியலாக்கம் தொடர்பான விழிப்புணர்வு (ஊடகக் கட்டுரைகள், மாநாட்டு/கருத்தரங்கு கருப்பொருள், பட்டியலாக்க அமைப்புகள் இடையே முன்னெடுப்புகள்)
  • அனைவரும் பகிரவேண்டிய அடிப்படை சீர்தரம் உருவாக்கல் (எ.கா டப்பிளின் கருவகத்தை அடிப்படையாகக் கொண்டு)
  • அனைவரும் பகிரவேண்டிய அடிப்படை சீர்தரம் உடன்பாடு
  • தற்போது பட்டியலாகத்தில் ஈடுபட்டு இருக்கும் 3 நிறுவனங்கள் தமது தரவுகளைப் மீதரவு சீர்தரம் உடன்பாட்டிற்கு ஏற்ப பகிர்வதற்கான உடன்பாடு
  • பொது, திறந்த, ஒருங்கிணைந்த, இணையத் தமிழ் நூற்பட்டியலுக்கான தளம் (மென்பொருள் உருவாக்கம், தொடர் விருத்தித் திட்டம்)
  • தமிழ்ப் பட்டியலாக்கப் பணிகளின் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்களுக்கு இடையேயான பட்டியலாக்கம் தொடர்பான வலைப்பின்னல்
  • பயனர்களிடம் எடுத்திச் செல்லல்
  • அச்சுவடிவில் உள்ள தமிழ் நூல்கள்/படைப்புகள் பற்றிய தகவல்களை உருப்படிகளாக (itemized) மாற்றி தளத்தில் சேர்த்தல்

7. தற்கோள்களும் கட்டுப்பாடுகளும் - Assumptions and Constraints

இச் செயற்திட்டம் தமிழ் பட்டியலாகத்தில் ஈடுபட்டு இருக்கும் பெரும்பாலான அமைப்புகளிடம் இருந்த் நல்நோக்கும் ஒத்துளைப்பும் கிடைக்கும் என்று அனுமானிக்கிறது. இந்தச் செயற்திட்டத்தை ஒன்று அல்லது சில அமைப்புகள் முதன்மையாக பிற அமைப்புகளின் ஒத்துளைப்புடன் முன்னெடுக்கும் என்று அனுமானிகிறது.

இச் செயற்திட்டத்துக்குத் தேவைப்படும் மென்பொருள் உயர் செலவு இல்லாமல் கட்டற்ற முறையில் விருத்தி செய்யக் கூடியதாக இருக்கும் என்று அனுமானிகிறது.

8. இடர்கள் - Risks

இச் செயற்திட்டத்தை முன்னெடுக்க தமிழ் பட்டியலாகக்தில் ஈடுபட்டு இருக்கும் சில முக்கிய அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்காமல் போகலாம். இதனை எதிர்க்கலாம்.

இது ஒரு தொலைநோக்கு, நீண்ட காலச் செயற்திட்டம் என்பதால் இதனை தமது பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு வளங்கள் ஒத்துக்க எந்த அமைப்பும் முன்வராமல் போகலாம்.

9. மதிப்பீட்டுச் செலவுகளும் வளங்களும் - Estimated Costs and Resources

இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. (இத் திட்டத்தில் ஒருங்கிணைப்பு அணி, நுட்ப அணி ஆகிய இரண்டும் முக்கிய பங்காற்றும்.)

10. மதிப்பீட்டு காலம் - Estimated Duration

இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. (இது ஒரு நீண்டகாலத் திட்டம் ஆகும்.)

11. உசாத்துணைகள் - References

12. கலைச்சொற்கள் - Technical Terms

  • நூற்பட்டியல்/விபரப்பட்டியல் - catalog
  • பட்டியலாக்கம் - cataloging
  • மீதரவு - metadata
  • வலைச் சேவைகள் - web services
  • செயற்திட்டம் - project

குறிப்புகள்

http://tamil.connemara.tnopac.gov.in/cgi-bin/koha/oai.pl

(OAI-PMH service is disabled)

http://chennai.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=2467853

(OAI-PMH service is disabled)

http://lismysore.pbworks.com/w/page/54661319/Library%20OPACs%20-%20India

https://libcat.uchicago.edu/ipac20/ipac.jsp?term=tamil&index=.TI

(sirisidynix - Horizon Information Portal)

மூல ஆவணம்

https://docs.google.com/document/d/1G84Z3WcP4MX9mVJsuMxvUBGrXTuVTUo3Va5y7vTvfk4/edit?usp=sharing

⚠️ **GitHub.com Fallback** ⚠️