நூலக நிறுவன எண்ணிம நூலகத்துக்கான பொருட் தலைப்புக்கள் - noolahamfoundation/information-science GitHub Wiki

Table of Contents

1. அறிமுகம்

தகவல் வளங்களின் பெருக்கம் உருவாக்கிய முக்கிய சிக்கல், ”தேவையான வளங்களை அடையாளங் காணுதல்” என்பதாகும். நூலகவியலின் முக்கிய நோக்கமே, அச்சிக்கலுக்கான விடைதான். ஆகவே, பட்டியலாக்கம், பகுப்பாக்கம் என அது விரிவடைந்தது.

பொருட் தலைப்புக்கள் (subject headings) என்பவை தகவல் வளங்களை ஒழுங்குபடுத்தவும், எளிமையாக அடையாளங் காணவும் பயன்படும் முக்கிய காரணிகளாகும். ஏற்கனவே வரையறை செய்யப்பட்ட சொற்றொகுதியினைக் கொண்டு, தகவல் வளங்களை அடையாளங் காண இவை உதவுகின்றன.

2. பொருட் தலைப்புக்கள்

பொருட் தலைப்புக்கள், பொதுவாக துறைச் சார்ந்து காணப்படுகின்றன. மிகவும் விரிவான, பொருட் தலைப்புத் தொகுதிக்கான எடுத்துக்காட்டு காங்கிரசு நூலகப் பொருட் தலைப்புக்கள் ஆகும். இந்தத் துறைசார் பொருட்தலைப்புக்களைத் தவிர, தேசிய நூலகங்கள் ஏனைய அடையாளங் காணும் முறைகளை ஏற்படுத்தியுள்ளன.

  • ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரசு நூலகமானது,
  1. ஆட்கள் (People)
  2. இடங்கள் (Places)
  3. காலப்பகுதி (Times)
ஆகியவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.
  • அவுஸ்திரேலிய தேசிய நூலகமானது
  1. ஆட்கள் (People)
  2. நிறுவனங்கள் (Organizations)
ஆகியவை தொடர்பான சேகரங்களைக் கவனப்படுத்துகிறது. (Resources by, Resources about, possibly related resources என்ற மாதிரியாக)

3. நூலக நிறுவன எண்ணிம நூலகத்துக்கான பொருட் தலைப்புக்கள்

இலங்கைத் தமிழ்ச் சூழலில், தூவியின்(Dewey Decimal Classification) வகைப்படுத்தல் முறை, பரவலான பயன்பாட்டில் உள்ளது. அது பல படிகளில் விரிவடையக் கூடியது. ஆனால், காங்கிரசு நூலகப் பொருட் தலைப்புக்கள் போன்ற எதுவும் தமிழில் இதுவரை இல்லை. தேடல் வசதியினை முழுமையாகப் பயன்படுத்துவதாயின், எமது சமூகத்தின் தகவல் உள்ளடக்கம், தகவற் தேவைகள், தகவல் இடைவெளிகளை (content, needs and gaps) உள்வாங்கியதான, பொருட் தலைப்புத் தொகுதி ஒன்று தமிழில் தேவை. பல விதமான தலைப்புக்களை இணைத்து, உயர் தேடலினை மேற்கொள்ள இது அவசியமாகும். அவ்வகையில் நிறுவனத்தின் தகவற் கொள்கைகளுக்கு அமைவாக, பொதும(Creative Commons Attribution Share Alike) உரிமத்துடன் கூடியதான பொருட் தலைப்புத் தொகுதி ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரை பொருட்தலைப்புக்கள் தவிர,

  1. ஆட்கள்
  2. நிறுவனங்கள்
  3. இடங்கள்
என்ற அணுகுமுறை மிகப்பொருத்தமானது.
எமது தகவல் வளங்களை இந்த நான்கு வகைபிரித்தலூடாக அணுகுவது மிகவும் பொருத்தமானது ஆகும். இம்முறை, ஏற்கனவே எம்மிடம் மறைமுகமாக உள்ளது. ஆனால், அதனை நாம் எமது சேகர அபிவிருத்திக்கான வியூக அணுகுமுறையாக மாற்றிக் கொள்வது அவசியமாக உள்ளது.
  1. ஆட்கள் சார்ந்த ஆவணப்படுத்தல் (எழுத்தாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், நினைவு மலர்கள், வலைப்பதிவுகள் போன்றனவெல்லாம்)
  2. நிறுவனங்கள் சார்ந்த ஆவணப்படுத்தல் (இப்போதுள்ள தரவுத்தளம் பகுதிக்குள் உள்ளடங்குபவையும் ஏனைய நிறுவனங்களும்)
  3. இடங்கள் சார்ந்த ஆவணப்படுத்தல் (நிழற்ப்படங்கள், நிகழ்படங்கள், கட்டிடங்கள், பிரதேச வரலாறுகள், வழக்காறுகள், மரஞ்செடிகொடிகள், விலங்குகள்-பறவைகள், கனிம வளங்கள், நிலப் படங்கள்...)
முழுமைப்படுத்தல் சார்ந்து சிறு செயற்றிட்டங்களைத் திட்டமிடுகையில் இந்த அணுகுமுறை பலனளிக்கும்.

ஆட்கள், நிறுவனங்கள், இடங்கள், காலங்கள் என்பன மேற்தரவுகளாகவே உள்ளிடப்படும். இவற்றுக்குத் தனியான நியமங்கள் என்று இல்லை. ஆனால் சொற்களஞ்சியத்தினைக் கட்டுப்படுத்த வேண்டி இருக்கும். எடுத்துக்காட்டாக கொக்குவில் இடங்களில் ஒன்றாக வரும். ஆனால் நாச்சிமார் கோயிலடி என்பது வரலாமா இல்லையா என்பது போன்ற முடிவுகளைக் குறிப்பிடலாம்.

4. தமிழில் பொருட் தலைப்புக்கள் உருவாக்கம்

தமிழ்ச் சூழலினைப் பொறுத்தவரை, பொருட் தலைப்புக்கள் என வரையறுக்கப்பட்ட வெளியீடுகளின் பாவனை, இதுவரை இருப்பதாகத் தெரியவில்லை. தூவியின் பகுப்பாக்கத் தலைப்புக்கள் போன்றவை தமிழாக்கப்பட்டுள்ளன என்ற போதும், அது கட்டுப்படுத்தப்பட்ட சொற்களஞ்சியமாக வளர்க்கப்படவில்லை. மேலும் தமிழ்ச் சூழலுக்கெனச் சிறப்பாகத் தேவைப்படும், துறைசார் சொற்றொகுதிகளும் பாவனையில் இல்லை.

பாரம்பரிய நூலககங்களில், தூவியின் எண்கள் சார்ந்து தகவல்கள் வளங்கள் அடுக்கப்பட்டிருப்பது, பயனர்களது தேவைகளுக்கு ஓரளவுக்கேனும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், சொற்களை உள்ளிட்டுத் தேடும் எண்ணிம நூலகச் சூழல்களில், பொருட் தலைப்புக்கள் இன்றியமையாதவை.

அவ்வகையில், தமிழுக்கான பொருட் தலைப்புச் சொற்றொகுதியொன்றினைப் பயன்படுத்துவது, நூலக நிறுவன எண்ணிம நூலகத்தின் அடுத்த கட்டத்துக்கு அவசியமாகிறது.

5. பரிந்துரைகள்

  1. பொருட் தலைப்புக்கள் உருவாக்கம் நூலக நிறுவனத்தின் ஒரு செயற்றிட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்குப் போதிய வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
  2. நூலகவியலாளர்கள், துறைசார் அறிஞர்கள் போன்றோரது உதவியுடன், இந்தப் பொருட் தலைப்புத் தொகுதி உருவாக்கப்பட வேண்டும்.
  3. அத்தொகுதியானது, நூலாகவும் அச்சிடப்பட்டு நூலகங்களுக்கு தரப்பட வேண்டும். கிடைக்கும் பின்னூட்டங்களின் அடிப்படையில், அது மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
  4. உருவாக்கப்படும் வெளியீடானது, நூலக நிறுவனத்தின் தகவற் கொள்கைகளுக்கு அமைவாக, பொதும (Creative Commons Attribution Share Alike) உரிமத்துடன் மட்டுமே வெளியிடப்படலாம்.
  5. பொருட் தலைப்புக்கள், எண்ணிம நூலகத்தில் பயன்படுத்தப்படுகையில், தேவைப்படும் புதிய தலைப்புக்கள் தொடர்ச்சியாக அடையாளங் காணப்படுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்
  6. குறித்த கால இடைவெளிக்கொருமுறை, மீளாய்வு செய்து புதிய தொகுதிகள் வெளியிடப்பட வேண்டும்.

மூல ஆவணம்

https://drive.google.com/file/d/0BzaIr9bDFPlyYVcyX2ZBX000Tmc/view?usp=sharing

⚠️ **GitHub.com Fallback** ⚠️