2017 RB Call for Nominations - noolahamfoundation/governance GitHub Wiki

Table of Contents

இ. மயூரநாதன்

Candidate's Bio/Qualifications

இ. மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவின் (ta.wikipedia.org) முன்னோடிப் பங்களிப்பாளர் ஆவார். இலங்கையில் வண்ணார்பண்ணையில் பிறந்து, கட்டிடக்கலையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் நெடுங்காலம் பணிபுரிந்தவர். தற்போது ஓய்வு பெற்று யாழில் மீள் குடியேறியுள்ளார். 2003 ஆம் ஆன்று தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடக்கி வைத்ததில் இருந்து இன்று வரைக்கும், தமிழ் விக்கிப்பீடியாவிற்கும், அதன் உறவுத்திட்டங்களுக்கும் சிறப்பாகப் பங்களித்து வருகிறார். கூட்டாக்கச் செயற்திட்டங்களை ஒருங்கிணைப்பதில், தொலைநோக்கான முறையில் நெறிப்படுத்துவதில் ஆழ்ந்த அனுபவம் உடையவர். இவரது தமிழுக்கான சிறந்த பங்களிப்பினைக் கெரவித்து கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (tamilliterarygarden.com) 2015 இக்கான இயல் விருது இவருக்கு வழங்கப்பட்டது. நூலகத்தின் தொடக்க காலம் முதலே நூலகப் பணிகளை அவதானித்து வருபவர், பயன்படுத்தி வருபவர்.

Candidate's Statement

1. ஈழத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணப்படுத்தல் தொடர்பான உங்களின் ஈடுபாடு என்ன?

ஈழத்துத் தமிழ்ச் சமூகங்கள் தொடர்பில் ஆவணப்படுத்தலுக்கான தேவை பல்வேறு அம்சங்களையும் துறைகளையும் தழுவியதாக உள்ளது. நமது வரலாற்றுத் தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலும், இவ்வாறான தகவல்கள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பிறருக்கும் வருகின்ற தலைமுறைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் பரப்பப்படவேண்டும் என்பதன் அடிப்படையிலும் எல்லாவிதமான ஆவணப்படுத்தல் தொடர்பிலும் எனக்கு ஆர்வம் உண்டு. நான் கட்டிடக்கலைத்துறை சார்ந்தவன் என்ற வகையில் கட்டிடக்கலை சார்ந்த மரபுரிமைகளினதும், அதனோடு தொடர்புடைய பிற மரபுரிமைகளினதும் ஆவணப்படுத்தலில் எனக்குச் சிறப்பு ஆர்வம் உண்டு. இது தொடர்பான எனது செயற்பாடுகள் 1970களில் யாழ்ப்பாணத்து நார்சார் வீடுகளை ஆவணப்படுத்தும் முயற்சியோடு தொடங்கியது. பல்வேறு காரணங்களால் முறையான ஆவணப்படுத்தல் என்ற அளவுக்கு எனது செயற்பாடுகள் அமையாவிட்டாலும், இவை குறித்த தகவல்களைக் கட்டுரைகள் ஊடாக ஆவணப்படுத்தி வந்துள்ளேன். 1980களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மத்தியில் இது தொடர்பாகப் பிரசாரங்களை மேற்கொண்டேன். (இதற்காக நான் தயாரித்த துண்டுப் பிரசுரத்தின் உள்ளடக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) 1990களில் நமது கட்டிடக்கலை மரபு குறித்தும் அதைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் "The Traditional Buildings of Jaffna" என்னும் தலைப்பில் ஒரு இணையத்தளத்தை உருவாக்கிப் பேணினேன். (Archived version: http://www.oocities.org/rmayooranathan/index.html ) நமது கட்டிடக்கலை மரபுரிமை தொடர்பில் நான் சேகரித்த தகவல்கள்பின்வரும் கட்டுரைகள் வடிவில் வெளியாகியுள்ளன: Understanding the Architectural Traditions of Jaffna (Published in "The Sri Lanka Architect"), சமூக, பொருளாதார, பண்பாட்டு இயங்கியல் நோக்கில் யாழ்ப்பாணத்து வீடுகள் (ழகரம், ஆனி 2016), இலங்கைத் தமிழர் மரபுவழிக் கட்டிடச் சூழல்களும் அவற்றை ஆவணப்படுத்தலும் (தமிழ் ஆவண மாநாடு, 2013), யாழ்ப்பாணத்து வீடுகளில் முற்றமும் பண்பாடும் (9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் கட்டுரை, 2015)

2. நூலக நிறுவனத்தின் எந்தச் செயலாக்கங்கள் அல்லது செயற்திட்டங்களில் குறிப்பாக நீங்கள் பங்களிக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?

ஆவணப்படுத்தல் தொடர்பில், குறிப்பாகப் பண்பாட்டு மரபுரிமைகளை (எழுத்தில் உள்ளனவும், இல்லாதனவும்) ஆவணப்படுத்தல் தொடர்பில் ஆவணப்படுத்துவதற்கான விடயங்களை இனங்காணல், அவற்றுக்கான திட்டங்களை உருவாக்கல், அவற்றை ஒருங்கிணைத்தல் போன்ற விடயங்களில் பங்களிக்க முடியும். தவிர, ஆவணப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களிலும் பங்களிப்புச் செய்ய முடியும்.

3. நூலக நிறுவனத்தின் வழிகாட்டுநர் சபையின் பொறுப்புக்கள் எவை?

பொதுவாக நூலக நிறுவனத்தின் அடிப்படை நோக்கங்களை அடையும் விதமாக ஆட்சிக்குழுவாகச் செயற்பட்டு அதை வழிநடத்திச் செல்வது வழிகாட்டுனர் சபையாகும். உத்திகள், கொள்கைகளை உருவாக்குதல், அவற்றுக்கமைய முடிவுகளை எடுத்தல், வழங்களைத் திரட்டி அவற்றை உரிய முறையில் பயன்படுத்துதல், தேவை ஏற்படும்போது நிறுவன மேலாண்மை உதவிகளைச் செய்தல், திட்டங்களையும் பிற செயற்பாடுகளையும் கண்காணித்தல், கவனத்துடனும் நேர்மையாகவும் நம்பிக்கைக்கு உரிய விதத்திலும் செயற்படுதல், நிறுவனத்தோடு தொடர்புடையோருக்குப் பொறுப்புக்கூறல் என்பன வழிகாட்டுனர் சபையின் குறிப்பான பொறுப்புக்களாக இருக்கும்.

சஞ்சீவி சிவகுமார்

Candidate's Bio/Qualifications

சஞ்சீவி சிவகுமார் , இலங்கை, கல்முனையைச் சேர்ந்தவர். வேளாண் துறையில் பட்டப்படிப்பு பெற்றவர். இலங்கைத் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றுகின்றார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இலங்கையில் நடந்த முதலாவது தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டைறையை ஒருங்கிணைத்தவர். கூட்டாக்கச் செயற்திட்டங்களில் (collaborative community projects) விரிவான அனுவபவம் உடையவர். நூலக மலையக ஆவணகத்தில் 2016 மத்திய பகுதியில் இருந்து பங்களித்து வருகிறார்.

Candidate's Statement

ஈழத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணப்படுத்தல் தொடர்பான உங்களின் ஈடுபாடு என்ன?

  1. தமிழ் விக்கிப்பீடியாவில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பங்களித்து வருகின்றேன். ஈழத் தமிழ் சூழல் குறித்த விடயங்கள் பல பதிவுசெய்ய முடிந்தது. அறிவியல் குறித்த கட்டுரைகளை எழுதிய சந்தர்ப்பங்களிலும் ஈழத்தமிழ் மொழிவழக்கை ஆவணப்படுத்த சந்தர்ப்பமானது. விக்கிப்பீடியாவில் நிருவாக செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றேன்.
  2. கட்டுரைகள், ஆய்வரங்கக் கட்டுரைகளில் ஆவணப்படுத்தல் வியங்கள் மேற்கொண்டமை. எ.கா: 2013 இல் நூலக நிறுவனம் நடாத்திய ஆவணப்படுத்தல் மாநாட்டில் “தமிழில் பதிவாகும் சுவர்க் கவிதைகளும் அவற்றின் ஆவணப்படுத்தலும்"கட்டுரை.
  3. நூலக நிறுவனத்தின் மலையக ஆவணமாகலில் பங்களிப்பு

நூலக நிறுவனத்தின் எந்தச் செயலாக்கங்கள் அல்லது செயற்திட்டங்களில் குறிப்பாக நீங்கள் பங்களிக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?

  1. மலையக, கிழக்கு, முஸ்லிம் ஆவணமாக்கல்
  2. மெய்நிகர் பள்ளிக்கூடம் முதலான கல்விச் செயற்பாடுகள்

நூலக நிறுவனத்தின் வழிகாட்டுநர் சபையின் பொறுப்புக்கள் எவை?

  1. வருடாந்த செயற்பாட்டு, நிதி திட்டமிடல்.
  2. நிறுவனச் செயற்பாடுகளில் முடிவெடுத்தல், வழிநடத்தல்
  3. நிதித் தேட்டம்
  4. வியூகத்திட்டமிடல்
  5. திட்ட மேற்பார்வை

சிறீகாந்தலட்சுமி அருளானந்தம்

Candidate's Bio/Qualifications

சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகர். ஆவணமாக்கலில் பட்டம் பெற்றவர். 30 ஆண்டுகளுக்கு மேலேன நூலக அனுபவமுள்ளவர். நூலக விழிப்புணர்வு நிறுவகத்தினை 2005 முதல் இயக்கி வருபவர். நூலகத் தகவல் அறிவியல் தொடர்பில் தமிழில் முதன்மை உசாத்துணை வளங்களைத் தந்தவர். துறைசார் கலைக்களஞ்சியம், சொற்களஞ்சியம் ஆகியவற்றோடு தகவல் வளங்களும் சேவைகளும், தகவல்வள முகாமைத்துவம் ஆகிய சேகர அபிவிருத்தி தொடர்பான இரு நூல்களும் இவருடையவை. இலங்கையின் நூலகவியல் சார்ந்த முக்கிய அமைப்பான இலங்கை நூலகச் சங்கத்தின் (SLLA) அடுத்த தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பல்வேறு நூலகவியல், ஆவணமாக்கச் செயற்பாடுகளுக்கு ஆலோசகராகச் செயற்பட்டுள்ளார். நூலக நிறுவனத்திற்கு ஆரம்ப காலத்திலிருந்தே பங்களித்து வரும் இவர் நிறுவனத்தின் இரண்டாவது செயற்றிட்டமான யாழ்ப்பாண மின்னூலாக்கச் செயற்றிட்டம் 2006 இனை முன்னெடுத்தவர். நூலகப் பகுப்பாக்கம் தொடர்பான செயற்பாட்டினையும் முன்னெடுத்தவர். நூலகவியல் சார்ந்த ஆலோசனைகளைத் தொடர்ச்சியாக வழங்கி வருபவர். 2017 இல் தொடங்கப்பட்டுள்ள தகவலறிவியல் ஆய்விதழைப் பிரதம ஆசிரியராக முன்னெடுத்தும் வருகிறார்.

Candidate's Statement

1. ஈழத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணப்படுத்தல் தொடர்பான உங்களின் ஈடுபாடு என்ன?

ஆவணவாக்கச் செய்முறையில் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு சமூகத்தின் தலைவிதியை அச்சமூகத்தைத் தவிர வேறு எவராலும் எழுதமுடியாது என்ற ஆழமான நம்பிக்கை என்னிடம் உண்டு. ஆவணவாக்கமானது தொகுப்பு சார்ந்தது, பதிப்பு சார்ந்தது. இந்த இருவகை ஆவணவாக்கத்திலும் முழுமையாக ஈடுபடுவதன் மூலம் ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஆவணவாக்கச் செயற்பாட்டை ஆரோக்கிய நிலைக்கு இட்டுச் செல்வது ஒரு நூலகரின் கடமையாகும். தொகுப்புச் சார்ந்த ஆவணவாக்க வகையில் ஈழத்தமிழர் ஆய்வடங்கல் என்ற செயற்திட்டத்தினூடாக கிட்டத்தட்ட 15,000 பருவ இதழ் மற்றும் சஞ்சிகளில் வெளிவந்த கட்டுரைகளை ஆவணப்படுத்தியிருப்பதுடன் அதன் இரு பகுதிகளை வெளியிட்டும் இருக்கின்றேன். என து இரு நூல்களான “அகரவரிசை பகுப்பாக்கச் கலைச்சொற்றொகுதி, நூலக தகவல் அறிவியலுக்கான கலைக்களஞ்சிய அகராதி இரண்டுமே தொகுப்பு சார்ந்த ஆவணவாக்கம் தொடர்பாக என்னால் உருவாக்கப்பட்டவை. ஈழத்தின் மரபுரிமைகளை ஆவணப்படுத்துவதில் எனக்கிருக்கும் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக ‘ வாழும்மரபு (http://jaffnaheritage.blogspot.com/ ) என்ற தலைப்பில் மரபுரிமைகள் சார்ந்த விம்ப ஆவணவாக்கத்தை மேற்கொண்டு இருப்பதுடன் 2005 இலிருந்து இதனை இலவச வலைத்தளமூடாக உலகிற்கு அறியத்தந்து கொண்டிருக்கின்றேன். தற்போது “ஈழத்தமிழர் வாழ்வியல்“ என்ற இன்னொரு வலைத்தளமானது 2011இல் என்னால் உருவாக்கப்பட்டு பதிவிடப்பெற்றுக்கொண்டிருக்கின்றது. (https://jaffnaheritage.wordpress.com/). . இதுமட்டுமன்றி ஆவணவாக்கம் தொடர்பில் பல மாநாடுகளில் கட்டுரை வாசித்திருக்கின்றேன். தற்போது ஆவணவாக்கம் தொடர்பாக நூலொன்றின் உருவாக்கத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன்.

2. நூலக நிறுவனத்தின் எந்தச் செயலாக்கங்கள் அல்லது செயற்திட்டங்களில் குறிப்பாக நீங்கள் பங்களிக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?

நூலக நிறுவனத்தின் செயற்திட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே பங்களிப்பு செய்து கொண்டிருக்கின்றேன். இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட ஈழத்தமிழ் ஆக்கங்களை இலகுவாக தேடுகை செய்வதற்கான அனைத்து ஒழுங்கமைப்புச் செயற்பாடும் நூலகரைச் சார்ந்தது என்ற வகையில் அதன் பொறுப்பை சரிவரச் செய்வதற்கான சூழமைவை நூலக நிறுவனம் மிக விரைவாக செய்து தரவேண்டும் என்பது எனது கோரிக்கை. இதுவரை பதிவிடப்பெற்றுள்ள சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் அதிலுள்ள கட்டுரைகளை தனியாக தேடமுடியாத வகையில் ஒன்றாகப் பதிவிடப்பெற்றிருக்கின்றன. அதற்கான ஒழுங்கமைப்பிலும் கவனம் செலுத்துவது எனது கடமை என நினைக்கின்றேன். இதுதவிர மிகவிரைவாக மறைந்து கொண்டிருக்கும் எமது மனித வளங்களிடம் மறைந்திருக்கும் உள்ளக அறிவை ( tacit knowledge) கட்புல செவிப்புல பதிவினூடாக ஆவணப்படுத்துவது மிக அவசரமாக செய்யவேண்டிய பணி என்பதைக் கருத்தில் கொண்டு அதனை நூலக நிறுவனம் முன்னெடுக்கும் போது அதற்குரிய எனது பங்களிப்பையும் வழங்கலாம் என நினைக்கின்றேன்.

3. நூலக நிறுவனத்தின் வழிகாட்டுநர் சபையின் பொறுப்புக்கள் எவை?

வழிகாட்டுனர் சபை என்பது வெறுமனவே கௌரவத்திற்காக உருவாக்கப்படும் சபையன்று. நூலக நிறுவனத்தின் அடிப்படை நோக்கங்களை அடைவதற்கு வழிகாட்டும் பெரும்பணி வழிகாட்டுனர் சபைக்கு உண்டு. வழிகாட்டுனர் சபையின் சரியான ஆலோசனைகள் நூலக நிறுவனத்தின் முகாமைத்துவத்தை சீராக்குவதற்கு அவசியமானவை.. பொதுவாக வழிகாட்டுனர் சபையின் அடிப்படைக் கடமைகளான உத்திகள், கொள்கைகளை உருவாக்குதல், அவற்றுக்கமைய முடிவுகளை எடுத்தல், வளங்களைத் திரட்டி அவற்றை உரிய முறையில் பயன்படுத்துதல், நிறுவனத்தின் திட்டங்களையும் பிற செயற்பாடுகளையும் கண்காணித்தல், என்பவற்றுடன் நிறுவனம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைவதற்கு உதவுவதற்கான அறிவையும் திறன்களையும் வழங்க வேண்டியது அல்லது அத்தகை அறிவாளர்களையும் திறமையாளர்களையும் இனங்கண்டு அவர்களின் பங்களிப்பை நிறுவனத்திற்கு பெற்றும் வழிவகைகளை ஆராய்ந்தறிவது, வழிகாட்டுனர் சபையின் முக்கிய கடமைகளில் ஒன்று.

⚠️ **GitHub.com Fallback** ⚠️