நூலக நிறுவனத்தின் தகவல் அறிவியல் சார் தேவைகள் - noolahamfoundation/information-science GitHub Wiki

1. அறிமுகம்

நூலக நிறுவனமானது 2005 இல் நூலகத் திட்டமாகத் தொடங்கப்பட்டதாகும். இலங்கைத் தமிழ் நூல்களை இணையத்தில் வாசிக்கக் கிடைக்கச் செய்யும் ஓர் இணையத் தளம் என்பதாகவே அதன் தேவை ஆரம்பத்தில் உணரப்பட்டது. அதன் தொடக்க நிலையில் இரு விடயங்கள் மிகவும் ஆணித்தரமான உறுதி செய்யப்பட்டன. இத்தகைய முயற்சிகள் பலராலும் பல திசைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வளங்கள் சிதறடிக்கப்படக்கூடாது. அவ்வகையில் அதற்கு முந்தைய திட்டங்கள் முதன்மை எண்கள் வழங்கப்பட்டு இணைக்கப்பட்டன. இலங்கைத் தமிழ் நூல்கள் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டது. எரிந்த யாழ் நூலகத்தின் படம் முகப்பில் இடப்பட்டது. இலங்கைத் தமிழ் நூல்களுக்கான தேசிய நூலகமோ தேசிய ஆவணகமோ இல்லாத நிலைக்கான ஒரு மாற்றீடாக நூலகத் திட்டம் உணரப்பட்டது.

நூலகத் திட்டத்தின் வளர்ச்சியானது பின்னர் இதழ்களையும் ஏனைய ஆவணங்களையும் இணைத்தது. நூலகம் என்பதனையும் தாண்டி ஓர் ஆவணகமாக அதன் நோக்கம் விரிவாக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கைத் தமிழர் தொடர்பான சகலவித ஆவணப்படுத்தலினையும் செய்வதற்கான ஒரு நிறுவனமாக இப்பொழுது அது வளர்ச்சியடைந்துள்ளது.

இப்போதைய நிலையில் ஆவணப்படுத்தலுக்கான ஓர் ஆய்வகமாகவும் ஆவணகமாகவும் நூலகமாகவும் கல்வியமைப்பாகவும் அது பல்பரிமாணம் பெற்றுள்ளது. கருத்தியல் ரீதியாக நூலக நிறுவனம் மிகவும் வளர்ந்த போதும் அதன் உள்ளார்ந்த வளங்கள் அதன் கருத்தியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து வளரவில்லை. அவ்வகையில் திட்டமிடல் நிலையில் செழுமையாகவுள்ள பல விடயங்களுக்குச் செயல்வடிவம் வழங்குவதில் இடர்பாடுகளை நிறுவனம் எதிர்கொள்கிறது. அவ்வகையில் தகவற் சேவைகட் பிரிவின் வளத் தேவைகளை முன்வைப்பதே, இந்த அறிக்கையின் நோக்கமாகும்.

2. நூலக நிறுவனத்தின் தகவற் சேவைகள்

நூலக நிறுவனமானது பின்வரும் இரு வலைத்தளங்கள் ஊடாக அதனிடம் உள்ள தகவல் வளங்களைப் பயனர்களுக்கு வழங்குகிறது. எண்ணிம நூலகம் (www.noolaham.org): இது எண்ணிம நூலகம் என அழைக்கப்பட்டாலும், மீடியாவிக்கி மென்பொருளில் அமைந்த ஒரு வலைத்தளம் ஆகும். பள்ளிக்கூடம் (www.epallikoodam.org): இது மூடில் உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதியினைப் பயன்படுத்த அமைக்கப்பட்ட, மெய்நிகர் கல்விச் சூழல் ஆகும். மேலுள்ள இரு வலைத்தளங்கள் தவிர, நூலக நிறுவனத்துக்கு நேரடியாக வந்தும், தொலைப்பேசி, மின்னஞ்சல் வழிகளிலும், தொடர்புகொள்ளும் பயனர்களின் உசாத்துணைக் கோரிக்கைகளுக்கும், பதில் வழங்கப்படுகிறது.

3. தேவைகளும் முன்மொழிவுகளும்

3.1 நூலக ஒருங்கியம் (Library System)

ஓர் எண்ணிம நூலகமானது தேடல் (search), உலாவல் (browse) ஆகிய இரு வழிமுறைகளூடாகவும், அதன் தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஓர் எண்ணிம நூலகத்தின் அளவு பெரிதாகும்போது, அதன் தேடல் வசதி வினைத்திறனானதாக அமைய வேண்டும். நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகமானது, அடிப்படையில் உலாவலை இலகுபடுத்துவதாக அமைந்த தளமாகும். அதனிடம் ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகள் (structured data) இல்லை. அவ்வகையில் எளிய தேடல் (basic search) மட்டுமே அங்கு சாத்தியமாகிறது. அதாவது பொருட் தலைப்பு, காலப்பகுதி, ஆசிரியர் பெயர், தகவல் வளத் தலைப்பு எனக் குறிப்பிட்டு, எதனையும் தேட முடியாது. வெறுமனே சொற்களை உள்ளிட்டு மட்டுமே தேடக் கூடியதாக உள்ளது. 13,000 க்கும் அதிகமான ஆவணங்களையும், ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான உட்தலைப்புக்களையும் கொண்ட நூலக உள்ளடக்கத்திலிருந்து, எவரேனும் பயன்பெற வேண்டுமாயின், உயர் தேடல் வசதி (advanced search) வசதி அவசியமாகிறது. அத்தகையத் தேடலினைச் சாத்தியப்படுத்த வேண்டுமாயின், அனைத்துலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நூலக நியமங்களை அடிப்படையாகக் கொண்ட, ஒரு நூலக ஒருங்கியம் பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் அது பரவலான பாவனையுடைய தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படும் ஒரு திறமூல (open source) மென்பொருளாகவும் இருக்க வேண்டும்.

3.2 தகவற் கட்டமைப்பு (Information Architecture)

அனைத்துலக நியமங்களை, அடிப்படையாகக் கொண்ட நூலக ஒருங்கியம் தெரிவுசெய்யபடுவது மட்டும், எமக்கான தகவற் சேவைகளுக்குப் போதுமானதல்ல. எமது சமூகத்தின் தகவற் தேவைகளினைப் பூர்த்தி செய்யக் கூடிய விதத்தில், அது கட்டமைக்கப்படுவது அவசியமாகும். எடுத்துக்காட்டாக வெறுமனே தேடலினைச் சாத்தியப்படுத்தும் நூலக ஒருங்கியத்தினை தகவல் அறிதிறன் (information literacy), குறைவான பயனர்களால் பயன்படுத்த முடியாது. அவ்வகையில் உலாவல் வசதிகள், செம்மையாக இருக்க வேண்டும். அத்துடன் பொருட் தலைப்புக்கள், ஆட்கள், இடங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த கட்டமைப்பு, நூலக நிறுவனத்திற்கான தகவற் தேவைகளுக்கு, அவசியம் என முன்மொழியப்படுகிறது.

3.3 பொருட் தலைப்புக்கள் (Subject Headings)

இலங்கைத் தமிழ்ச் சூழலில் தூவியின் வகைப்படுத்தல் முறை பரவலான பயன்பாட்டில் உள்ளது. அது பல படிகளில் விரிவடையக் கூடியது. ஆனால் காங்கிரசு நூலகப் பொருட் தலைப்புக்கள் போன்ற எதுவும், தமிழில் இதுவரை இல்லை. தேடல் வசதியினை முழுமையாகப் பயன்படுத்துவதாயின் எமது சமூகத்தின் தகவல் உள்ளடக்கம், தகவற் தேவைகள், தகவல் இடைவெளிகளை (content, needs and gaps) உள்வாங்கியதான பொருட் தலைப்புத் தொகுதி ஒன்று தமிழில் தேவை. பல விதமான தலைப்புக்களை இணைத்து உயர் தேடலினை மேற்கொள்ள இது அவசியமாகும். அவ்வகையில் நிறுவனத்தின் தகவற் கொள்கைகளுக்கு அமைவாக பொதும (Creative Commons Attribution Share Alike) உரிமத்துடன் கூடியதான, பொருட் தலைப்புத் தொகுதி ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

3.4 உசாத்துணைச் சேகரங்கள் (Reference Collections)

நூலக நிறுவனத்தின் தகவற் கட்டமைப்பில் இனங்காணப்பட்ட ஆட்கள், இடங்கள், நிறுவனங்கள் தொடர்பான தரவகங்கள் நூலக நிறுவனத்தினால் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

  • ஆட்கள் தொடர்பான தரவகம் (Who is who)
  • இடங்கள் தொடர்பான தரவகம் (Database/List on places)
  • நிறுவனங்கள் தொடர்பான தரவகம் (Database on organizations)
ஆகிய மூன்றும் எண்ணிம நூலக வலைத்தளத்தில் உள்ளார்ந்தோ, வெளியேயோ கட்டமைக்கப்பட வேண்டும். ஒரு குறித்த ஆள், இடம் அல்லது நிறுவனம் தொடர்பான வளங்களை, ஒரே இடத்தில் பார்வையிடும் வசதியினை நூலக வலைத்தளம் வழங்கும் என்பதால், குறித்த ஆள், இடம் அல்லது நிறுவனம் தொடர்பான ஆக்கங்கள், சிறந்த உசாத்துணையாக அமைவதோடு, நூலகத்தின் தகவல் இடைவெளிகளை (information gaps) அடையாளங் கண்டு, அவற்றினை முழுமைசெய்ய உதவியாக இருக்கும்.

அடையாளங் காணப்பட்ட 1,50,000 தலைப்புக்களுக்கான தரவகங்கள் அமைக்கப்படின் பல நூறு இடங்கள், பல ஆயிரம் நிறுவனங்கள், சில/பல பத்தாயிரம் ஆட்கள் அடையாளங் காணப்படுவர். நடைமுறையில் முழுமையான தரவகங்கள் சாத்தியமில்லை. அவ்வகையில் இவ்விடயம், கலைக்களஞ்சியங்கள் போல அணுகப்பட்டு, பல ஆவணப்படுத்தலுக்கான ஆய்வுச் செயற்றிட்டங்களாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

3.5 மனித வளங்கள்

நூலகவியலில் கல்வியறிவும், அனுபவமும் கொண்ட ஆளணி எதுவும், இதுவரை நூலக நிறுவனத்தினுள் உள்வாங்கப்படவில்லை. இதுவே மேம்போக்கான 60 பகுப்புக்களுக்கு அப்பால், எந்தவிதமான பட்டியலாக்க, பகுப்பாக்க முன்னேற்றங்களை, நூலக வலைத்தளம் எட்டாததற்கான அடிப்படைக் காரணமாகும். ஒரு பொருத்தமான நூலக ஒருங்கியத்தினைத் தெரிவுசெய்து, தேவையான தகவற் கட்டமைப்பினை ஏற்படுத்தி, பொருட் தலைப்புக்களைத் தொகுத்துக் கொண்டாலும், இவற்றினை நூலகத் தகவல் வளங்களுக்குச் செலுத்தி, நூலகத்தினை முழுமையாக்க, துறைசார் அறிவுடைய ஆளணி இன்றியமையாதது ஆகும்.

ஒரு நூலகர், நிரந்தரமாக நியமிக்கப்படுவது அவசியமானதாகும். அந்த நூலகருக்கு நூலகவியல் தொடர்பில் ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தீர்த்துவைக்க, ஓர் ஆலோசகர் (consultant) தொடர்பு ஏற்படுத்தப்பட வேண்டும். இது அடிப்படையான தேவை ஆகும். இந்த நூலகர் என்பவர், சேகர முகாமைத்துவம், சேகர அபிவிருத்தி, உசாத்துணைச் சேவைகள், ஆய்வு உதவி ஆகியவற்றுக்குப் பொறுப்பாக இருப்பார். உள்வாங்கப்படும் நூலகர், அவரது பொறுப்புக்களைச் சரிவரச் செய்வதற்கு, நூலக ஒருங்கியம், பொருள் தலைப்புத் தொகுதி, உதவி ஊழியர்கள் ஆகிய வளங்கள் முன்நிபந்தனைகள் ஆகும்.

  1. சேகர முகாமைத்துவம் (Collection Management): ஏற்கனவே நூலக வலைத்தளத்தில் உள்ள விடயங்களை, புதிய நூலக ஒருங்கியத்துக்கு நகர்த்தி ஒழுங்கமைக்கும் செயற்பாடுகள்
  2. சேகர அபிவிருத்தி (Collection Development): ஏற்கனவே உள்ள சேகரங்கள் சார்ந்த புதிய வெளியீடுகளைத் தேடிச் சேர்த்தலும், இடைவெளிகளை இனங்கண்டு நிரப்புதலும்
  3. உசாத்துணைச் சேவைகள் (Reference Services): நூலக நிறுவன உதவியினை நாடும் பயனர்களுக்கு உதவுவதும், அதனடிப்படையில் நூலகத்தினை மெருகூட்டுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதும்
  4. ஆய்வு உதவி (Research Support): நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தலுக்கான ஆய்வுச் செயற்பாடுகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல்
அத்துடன் இப்போதுள்ள உள்ளடக்கத்தினை, புதிய ஒருங்கியத்துக்கு நகர்த்த எனக் குறைந்த்து, இரு நூலக உதவியாளர்கள் தேவை. இவர்கள் நூலகரின் மேற்காட்டலில், பட்டியலாக்க வேலைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இவ்விடயம் செயற்றிட்டங்களாக முன்னகர்த்தப்படலாம். இவர்கள் முதன்மை நூலகரின் வழிகாட்டலில், எமது பொருட்தலைப்புத் தொகுதியினை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே உள்ள தகவல் வளங்களையும், புதிய தகவல் வளங்களையும் பட்டியலாக்கம் செய்வர். அத்துடன் நூலகரின், மற்றச் செயற்பாடுகளுக்கு வேண்டிய உதவிகளையும் வழங்குவர்.

இந்த ஆண்டிறுதியில் நூலகத்தின் சேகரம், ஏறத்தாழ 15,000 இனை எட்டும். இவற்றின் உள்ளடக்கம், வளமொன்றுக்கு 10 வரும் என்றால் சுமார் ஒன்றரை இலட்சம் தலைப்புக்கள் உள்ளன. இது ஒரு பிரமாண்டமான நூலக உள்ளடக்கம் ஆகும். ஓர் அலுவலர், ஒரு நாளில் 25 தலைப்புக்களை உள்ளிட முடியும் என்றால், 6,000 மனித நாள் உழைப்புத் தேவை. அதாவது இந்த வேலையினை, 5 ஆண்டுகளில் பூர்த்திசெய்வதாயின் கூட, 5 முழு நேர ஊழியர்கள் தேவை. இது மேலோட்டமான கணிப்பீடே ஆகும். நடைமுறையில் ஊழியர்களை உள்வாங்கியே, இந்த விடயத்துக்குத் தேவையான வளங்களை அளவிட முடியும்.

3.6 செயற்றிட்ட ஒழுங்கு (Project Process)

ஒரு தகவல் வளமானது, நூலக நிறுவனத்தின் ஆவணகத்தில் இணைக்கப்படுவதோடு, அதன் செயற்றிட்டச் சங்கிலி முடிவடைவதான நிலைமை, இப்பொழுது காணப்படுகின்றமை, ஒரு முக்கிய போதாமை ஆகும். இது ஒரு போத்தற் கழுத்து நிலை (bottle neck) என்ற புரிதலின்மை, வினைத்திறனற்ற செயற்றிட்டச் செயற்பாடுகளுக்கு அடிப்படையாக மாறியுள்ளது. அவ்வகையில், ஒரு தகவல் வளம் எண்ணிமப்படுத்தப்பட்டால், அது நூலகத்தில் முழுமையாக இணைக்கப்படுவது வரை, உடனடியாகவே நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இது ஏற்றுக் கொள்ளப்பட்ட, செயற்றிட்ட ஒழுங்காக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள குறைபாடுகளும் களையப்பட வேண்டும்.

3.7 சமூக வளங்கள் (Social Resources)

ஒரு நூலக ஒருங்கியத்தின் தேவை, பொருட் தலைப்புக்களின் தேவை, செயற்றிட்ட ஒழுங்குகள் போன்றவை, வெறுமனே நுட்பத் தீர்வுகளாக (Technical solutions) நூலக நிறுவனத்தினால் உள்வாங்கப்படுவது, சிக்கல்களுக்குத் தீர்வாகாது. இயக்குனர்கள், வழிகாட்டுநர் குழு, ஊழியர்கள், தன்னார்வலர்கள் போன்ற சகலரும், இவ்விடயங்களின் அவசியத்தினை உணர வேண்டும். அவ்வகையில், இவ்விடயங்களை அவர்களுக்கு விளங்கப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நூலக நிறுவனத்தின் தகவல் அறிவியற் தேவைகளை, நூலகத்தின் அனைத்து மட்டத்தினரும் புரிந்து கொண்டால் மட்டுமே, முழுமையான சேவையினை நிறுவனத்தினால் வழங்க முடியும்.

மூல ஆவணம்

https://drive.google.com/file/d/0BzaIr9bDFPlyX3J4OWJmd0tRRXc/view?usp=sharing

⚠️ **GitHub.com Fallback** ⚠️